உலகத்தையே `ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த படம் ஒட்டு மொத்த உலகத்தையும் திருப்பி போட்டது. அந்த வரிசையில் ஜுராசிக் யூனிவெர்சின் 7வது பாகமாக வெளியாகியிருக்கிறது `ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’.
இப்போது டைனோசர்கள் வெப்பமண்டல தீவுகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அந்தத் தீவுகளில் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் வசிக்கும் டைனோசர்களை மூன்று பிரமாண்ட டைனோசர்கள் பாதுகாக்கிறது. இந்த 3 டைனோசர்களின் டி.என்.ஏ-வில் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்தினைத் தயாரிக்கும் ரகசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதைப் பெறுவதற்காக, மருந்து நிறுவன அதிபர் மார்ட்டின் க்ரெப்ஸ் (ரூபர்ட் ஃப்ரெண்ட்) ஒரு ரகசியப் பயணத்தை அந்தத் தீவை நோக்கித் தொடங்குகிறார். அவருடன் முன்னாள் ராணுவ அதிகாரி ஜோரா பென்னட் (ஸ்கார்லட் ஜான்சன்), தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி லூமிஸ் (ஜானாதன் பெய்லி), கடற்பயணத்துக்கான கேப்டன் டன்கன் (மஹர்ஷலா அலி) மற்றும் அவரது உதவியாளர்கள் ஆகியோர் இணைகின்றனர்.
அவர்கள் செல்லும் வழியில், கடல்வாழ் டைனோசரால் தாக்கப்பட்டு படகு விபத்தில் சிக்கிய மற்றொரு குடும்பத்தையும் மீட்கிறார்கள். இதன் பின்னே கடல், நிலம், ஆகாயம் என மூன்று பகுதிகளிலும் நடக்கும் சாகசப் போராட்டமே ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபெர்த்’ படத்தின் கதை.
நீர், நிலம், காற்று என வரும் டைனோசர் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை பதட்டத்திலேயே வைத்திருப்பதுதான் திரைக் கதையின் வெற்றி. கடல் மற்றும் மலைப்பகுதி சண்டைக் காட்சிகள், இருக்கை நுனியில் உட்கார வைக்கின்றன. படம் 3டி தொழில்நுட்பத்திலும் மிரட்டுகிறது.
பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டும் இசையும், புதிய கதை களமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.