சென்னையில் ஒரு கம்பெனியில் கிளர்க்காக பணிபுரிகிறார் சரத்குமார்), அவரது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத். வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரே லட்சியமே ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். இதற்காக பல வேலைகள் செய்கிறார்கள். பல வழிகளில் பணம் சேமிக்கிறார்கள். என்றாலும் அவர்களின் எளிய கனவு நிறைவேறியதா? அதற்கு அவர்கள் கொடுத்த விலை என்ன? என்பதுதான் படத்தின் கதை.
சரத்குமார் இதுவரை இல்லாத அளவிற்கு படு இயல்பாக நடித்திருக்கிறார். நடுத்தர வர்க்கத் தந்தையின் பொறுப்புணர்வு, விடாமுயற்சி, சமூக மரியாதைக்காக ஏங்கும் கண்கள் , என ஒரு காட்சியில்கூட அவர் அழாமல் மற்றவர்களை அழ வைக்கிறார்.‘என்னை மாதிரி ஆயிராதப்பா’ என்று அவர் உடைந்து அழும் அந்த இடத்தில்மொத்த தியேட்டரையும் அழ வைத்து விடுகிறா
‘ஜெயிச்சிருவேன் பா’, ‘அப்பா சாரிப்பா’ இந்த இரண்டு வார்த்தைகளில் பொறுப்புள்ள இன்றைய மகனை கண்முன் நிறுத்துகிறார் சித்தார்த். அதே போல மகளாக வரும் மீதா ரகுநாத் ஆணி அடித்து ஆடியன்ஸ் மனதில் ஒட்டிக் கொள்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சைத்தரா தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போகிறார். தேவயானி கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
வாடகை வீடுகளின் வலியை ஓவியமாக பதிவு செய்கிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார்.
வீடு என்பது செங்கற்களும், சிமெண்டும் மட்டுமல்ல, அதில் வாழும் மனிதர்களின் பந்தமும், அன்பும்தான் என்பதை ஒரு மிடில் கிளாஸ் கனவோடு கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.