விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்பன் 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பார்கள். 16 பாய்ந்திருகிறார் சூர்யா விஜய்சேதுபதி.
தற்காப்பு வீரனான சூர்யா சட்டமன்ற உறுப்பினர் சம்பத்ராஜை பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்கிறார். அந்த கொலைக்கான காரணம் என்ன? எந்த மாதிரியான சூழ்நிலை அவரை கொலை செய்ய வைத்தது என்பதை பரபர ஆக்ஷன் களத்தில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு.
சூர்யா கேரக்டருக்கேற்ற உடம்பை வைத்திருக்கிறார். நிறைய பயிற்சி செய்திருப்பது அவரது உடல்கட்டில் தெரிகிறது. சண்டை காட்சிகளிலும் ஆக்ரோஷமாக மோதுகிறார். உருக வைக்கும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் நிறைவாக செய்திருக்கிறார்.
அவரது அண்ணன் கர்ணாவாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அவரது காதலியாக வரும் அபி நக்ஷத்திராவும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை அழகாக செய்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏவின் பழிவாங்கும் மனைவியாக வரலக்ஷ்மி சரத்குமார், வில்லி கேரக்டரில் மிரட்டுகிறார்.
தேவதர்ஷினி, தீலிபன், வேல்ராஜ், மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், ஸ்ரீஜித் ரவி, முருகதாஸ், முத்துகுமார் உள்ளிட்ட பலரும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை காட்சிகளில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். சாம் சி.எஸ். பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பிற்கு உதவுகிறது. ஆக்ஷன் காட்சிகளை குறைத்து கதைக்கு முக்கியத்தும் கொடுத்திருந்தால் முக்கியமான படமாகி இருக்கும்.