பறந்து போ: அபூர்வ குறிஞ்சி மலர்

காதல் திருமணம் செய்து கொண்ட அன்பான கணவன் சிவா, மனைவி கிரேஸ் ஆண்டனி. இவர்களது 10 வயது மகன் மிதுன் ரியான். அப்பா பலசரக்கு கடை வைக்க முயற்சி செய்கிறார், அம்மா சேலை வியாபாரம் செய்கிறார். ஆனால் தங்கள் மகனின் தேவைகள், ஆசைகளை மறந்து விடுகிறார்கள். இந்த நிலையில் தந்தையும், மகனும் ஒரு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நிலை அந்த பயணம் அவர்களுக்குள் என்ற மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதுதான் படம்.

வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ராம், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிவா, கிரேஸ், ரியான் ஆகிய மூவரைச் சுற்றிய கதையில், அவர்கள் சந்திக்கிற சம்பவங்கள் மிகவும் இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பது படத்துக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. கதையோடு இணைந்த நகைச்சுவையும் திரைக்கதையின் வேகத்துக்கு உதவி இருக்கிறது.

கோகுலின் அப்பா பாலாஜி சக்திவேல், பள்ளி தோழி அஞ்சலி, அவர் கணவர் அஜு வர்கீஸ், உள்ளிட்ட எல்லா கதாபாத்திரங்களும் நேர்மறையாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிவா தனது வழக்கமாக காமெடி பாதையை விட்டு விலகி நல்லதொரு குணசித்ர நடிகராகவும் வெளிப்பட்டிருக்கிறார். காதல் கணவரையும் மகனின் செல்லச் சேட்டைகளையும் சகித்து கொள்கிற பொறுமையை, இயல்பாக வெளிப்படுத்துகிறார் கிரேஸ் ஆண்டனி. தமிழுக்கு நல்லதொரு வரவு. மகன் ரியான் சேட்டைகள் சிரிக்க வைத்தாலும் அவனது கேள்விகள் சிந்திக்க வைக்கிறது.

சந்தோஷ் தயாநிதியின் இசையில், கார்க்கி வரிகளள் கதையோடு பயணிக்கிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்துக்கு உதவி இருக்கிறது. சில நூறு அடிகள் கொண்ட காங்கரீட் குகை மனிதர்களை கொஞ்சம் பறக்க வைக்கிற படம்.

Leave A Reply

Your email address will not be published.