காமராஜ் வாழ்க்கையை சினிமாவாக இயக்கி புகழ்பெற்ற ஏ.ஜே.பாலகிருஷ்ணன் திருவள்ளுவரின் வாழ்க்கை இப்படி இருந்திருக்கலாம் என்கிற கற்பனையில் உருவாக்கி உள்ள படம் இது.
கதைப்படி திருவள்ளுவர் வள்ளுவ நாட்டில் தனது, மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். அருகில் உண்ண குமணன் நாட்டில் பிரச்சினை. அண்ணணை காட்டுக்கு அனுப்பி விட்டு தம்பி நாடாளுகிறார். அவனது கொடுமையான ஆட்சியில் மக்கள் வதைபடுகிறார்கள். பக்கத்து நாட்டு மன்னனின் உதவியுடன் குமணன் நாட்டை மீட்க திருவள்ளுவரின் அறமும், அறிவு திறனும் எப்படி பயன்படுகிறது என்பதுதான் கதை.
திருவள்ளுவராக கலைச்சோழனும், வாசுகியாக தனலட்சுமியும், பரிதியாக குணாபாவும், பவளக்கொடியாக சுகன்யாவும் நடித்திருக்கிறார்கள். சற்று நாடகத் தன்மை தலை தூக்கினாலும், அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலிக்கிறது. எட்வின் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவரை புத்தகத்திலும், படமாகவும், சிலையாவும் பார்த்த நமக்கு நடமாடும் மனிதராக பார்க்கம் வாய்ப்பை தருகிறது படம். கட்டாயம் காண வேண்டிய படம்.