அம்பேத்குமார் வழங்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த படம் ‘டிஎன்ஏ’. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நாயகன், நாயகியாக நடித்தனர். ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் நடிகை நிமிஷா சஜயன் பேசியதாவது: பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால், அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன். நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி.
ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி. அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை.
இந்தப் படத்தில் பிறந்த 40 நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய அந்த தாய்மார்களுக்கு எனது நன்றி, என்றார்.
அதர்வா பேசியதாவது: இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்… எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் … யாருக்கு பிடிக்கும்… என்றெல்லாம் யோசிக்கவில்லை.
படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது.. படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.
இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் – பின்னணி இசையமைப்பாளர் – என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.