அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லவ் மேரேஜ்’. சண்முக பிரியன் இயக்கி உள்ளார், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் விக்ரம் பிரபு பேசியதாவது: நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை.
நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.
ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். என்றார்.