மதுவுக்கு அடிமையானவர்களை மையமாக வைத்து இதற்கு முன் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளிவந்திருக்கும் படம் ‘குட் டே’. மதுவுக்கு அடிமையானவர்களின் உளவியலோடு ஒரு நல்ல கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்.அரவிந்தன்.
மனைவி, மகள்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார் நாயகன் பிரித்விராஜ் ராமலிங்கம். 20 ஆயிரம் சம்பளத்தில் மொத்த குடும்பத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை.
ஒரு சம்பள நாளில் அவருக்கு சில பிரச்சினைகள், முதலாளி ஆபாசமாக திட்டுகிறார், மானேஜர் கன்னத்தில் அறைகிறார், மனைவி முழு சம்பளத்தையும் கேட்டு டார்ச்சர் செய்கிறார், வீட்டுக்காரர் வாடகை கேட்கிறார், இப்படியான மன அழுத்தத்தில் இருக்கும்போது மது அருந்துகிறார்.
அவர் மனதை அழுத்திய விஷயங்கள் போதை ஏறிய பிறகு பூதாகரமாக வெடிக்கிறது. அன்று இரவு முழுவதும் குடித்து விட்டு பல பிரச்சினைகளை சந்திக்கிறார், ஏற்படுத்துகிறார். அன்று இரவே குடியை அவர் விடுவதற்கான ஒரு சம்பவமும் நடக்கிறது அது என்ன என்பதே படத்தின் கதை.
பிரித்விராஜ் ராமலிங்கம் நடிக்கவில்லை… குடிகாரராகவே வாழ்ந்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் இல்லாமல் ஒரு குடிகாரனின் உடல் மொழியையும, வாய் மொழியையும் படு யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இன்ஸ்பெக்டரின் சட்டை அணிந்து கொண்டு பண்ணுகிற ரகளை, தன்னோடு கல்லூரில் படித்த பெண்ணின் வீட்டிற்கு பிறந்த நாள் கேக்கோடு சென்று பண்ணுகிற அலப்பறை என படம் முழுக்க சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறார்.
காளி வெங்கட்டும், மைனா நந்தினியும் சில காட்சிகளே வந்தாலும் தங்கள் இருப்பை பலமாக பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள். கான்ஸ்டபிளாக வரும் திருநங்கை ஜீவாவும் கவனிக்க வைக்கிறார்.
ஒரு குடிகாரனின் வாழ்க்கையையும், குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார பிரச்சினைகளையும் பேசி இருக்கிறது இந்த படம். குடிகாரர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனும் காண வேண்டிய படம்.