தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது டெவிலன் என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் திரு ந. ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தயாரிப்பாளர் ராஜ்குமாரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் கார்த்திகா, இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் 2025ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மாலை 4:01 மணிக்கு தொடங்கி, மே 31ம் தேதி மாலை 3:58 மணிக்கு திரையிடலுடன் முடிவடைந்தது. எனவே, மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன. இதனுடன், திட்டமிட்ட 48 மணி நேர இலக்கை 3 நிமிடங்கள் முன்னதாகவே முடித்தும் சாதனை படைக்கப்பட்டது.
இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு வழங்கிய சான்றிதழ் எண் மிழி24103366 எனும் எண்ணுடன் 2025 மே 31ம் தேதி அன்று பதிவானது. இந்த சாதனையை திருமதி ஹேமலதா தலைமையிலான குழு நேரடியாக கண்காணித்து, ஒவ்வொரு செயல்பாட்டையும் சான்று வழங்கும் முன் சரிபார்த்தது.
“டெவிலன்” என்பது ஒரே ஒரு வீட்டுக்குள் படமாக்கப்பட்ட மன அழுத்தம், பயம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட மனோதத்துவ திகில் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் திரு பிகாய் அருண்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை டி. ஜே. பாலா மேற்கொண்டார். இசையை கமல்ஜீத் சிங் வழங்கியிருந்தார். எடிட்டிங்கைபிரவீன் எம். செய்தார். ஒலி வடிவமைப்பை கரண் மற்றும் ஷிபின், பொதுமக்கள் தொடர்பு பணியை பெருதுளசி பழனிவேல் செய்தார்