‘சாருகேசி’க்கு தேசிய விருதுகள் கிடைக்கும்

கமல் நடித்த சத்யா, ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள சுரேஷ் கிருஷ்ணா, தற்போது இயக்கி உள்ள படம் சாருகேசி. இது ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தி வந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமாகும். இதில் நாடகத்தில் நடித்த சாருகேசி கேரக்டரில் ஒய்.ஜி.மகேந்திரனே நடித்துள்ளார்.
அவருடன் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, தேவா இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நடந்தது. விழாவில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது, “ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரன் சாரிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் எனக்கு ரஜினி சார் இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.

இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா அவர்கள் இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார். பா விஜய்யை சமுத்திரக்கனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் அவர்கள் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன்.

தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு ஒரு முக்கிய தூணாகவும் மாறி உள்ளார் ரம்யா. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம். என்றார்.

ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி, இந்த படத்தை தயாரிக்க முன் வந்த அருண் அவர்களுக்கு நன்றி. சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர் கிடைப்பது வரம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் கேட்டு கேட்டு இந்த படத்திற்குள் வந்துள்ளனர்.

சாருகேசி நாடகத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று தேவா கேட்டு வாங்கினார். சுகாசினி அவர்கள் ஒரு சிறப்பான நடிப்பை படத்தில் கொடுத்துள்ளார்.அதேபோல தலைவாசல் விஜய் நன்றாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கத்தி, ரத்தம் இன்றி வரும் படம் சாருகேசி. பா. விஜய் இந்த படத்தில் அற்புதமாக வசனம் எழுதியுள்ளார்.

சாருகேசி படம் முடிந்து அனைவரும் வெளியே வரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். ரஜினிகாந்த் சார் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆலோசராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளோம் என்பது தான் பெருமை. இந்த படத்திற்கு பல தேசிய விருதுகள் காத்திருக்கிறது” என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.