ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண் பாண்டியன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அஃகேனம். அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.
ஜூலை 4ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் நாயகி கீர்த்தி பாண்டியன் பேசியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்… அதன் தொழில்நுட்ப தரம்… சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.
அதன் பிறகு மீண்டும் என்னை சந்தித்து அந்த குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாக சொன்னார். அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது. அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக..ஒரு நடிகராக…. இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார்.
அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்: ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.
நான் இந்த படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.
இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்கு கிடைத்த ஒரே பதில்.. எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.
இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான்.
இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன். என்றார்.
அருண் பாண்டியன் பேசுகையில், ” நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது.
இந்த படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்ப கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்த குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் இந்த கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்கு சம்மதமா? எனக் கேட்டேன். அவர்களும் சரியென சம்மதித்தார்கள்.
அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்த படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா ?அவர்களின் திறமை என்ன? எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வர சொன்னால் அவர்கள் தங்களின் திறமையை காண்பிப்பார்கள் என்றார் அந்த தருணத்தில் இசையமைப்பாளர் -ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர் -என அனைவரும் வந்திருந்தனர். அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் என தீர்மானித்தேன்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ” என்றார்.