‘மெட்ராஸ் மேட்னி’யின் வெற்றி ட்ரீம் வாரியரால் சாத்தியமானது: இயக்குனர் நெகிழ்ச்சி

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி தயாரித்து இயக்கி இருந்த படம் ‘மெட்ராஸ் மேட்னி’. சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கடந்த 6ம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது: மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தை ஏன் முதலில் இயக்கினேன் என்றால்.. இது வரை சொல்லப்படாத ஒரு கதை. உண்மையான ஹீரோ யார் என்பதை சொல்லும் கதை இது. தான் முன்னேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் ஓயாமல் ஓடும் நம்முடைய அப்பா அம்மாக்கள் தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ.

அவர்களுடைய கதையை ஒரு திரையரங்க அனுபவத்துடன் கூடிய கதையாக சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த நோக்கத்தில் உருவானது தான் இந்த திரைப்படம். புது தயாரிப்பு நிறுவனம் – புது இயக்குநர் – புது தொழில்நுட்பக் கலைஞர்கள் – சின்ன பட்ஜெட் படம் – நாங்கள் எளிதாக காணாமல் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால் இந்த கதை ஒரு அர்த்தமுள்ள கதையாக இருந்ததால்.. ஊடகங்கள் இந்த படத்தை வெகுவாக ஆதரித்தன.‌ இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. இந்த படத்திற்கு நடிகர்கள் தங்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பை வழங்கி கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூட்டியதால் இந்த வெற்றி கிடைத்தது.

இந்தப் படத்திற்கு ரசிகர்களின் எதிர்வினையை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். படம் வெளியான இரண்டாவது நாள் பல்லாவரத்தில் இரவு காட்சியை பார்த்துவிட்டு திரும்பும் ஒரு பெண் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு’ நான் ஒரு டாக்டர் என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர் ‘என்று என்னிடம் சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் ரசிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள் மட்டுமல்ல. அறிவு பூர்வமானவர்களும் கூட. இந்த இரண்டும் இணைந்து கொடுத்தால் அவர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. மெட்ராஸ் மேட்னி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.