லிவிங்ஸ்டன் மகள் அதுல்யா ரவி நடத்தும் பீட்சா கடையில் வேலை பார்க்கிறார்கள் வைபவும், மணிகண்டன் ராஜேசும். லிவிங்ஸ்டனின் காட்பாதரான ஹூசைனி தனது வீட்டில் கொள்ளைப் போனது போல செட்டப் செய்து, இன்சூரன்ஸ் பணத்தை ஆட்டையைப் போட நினைக்கிறார். அந்த திட்டத்திற்கு அதாவது போலியாக வீட்டை கொள்ளை அடிக்க வைபவ் மற்றும் மணிகண்டனை அனுப்பி வைக்கிறார் லிவிங்ஸ்டன்.
ஆனால், அவர்கள் கொள்ளை அடிக்கும் பணம், தொலைந்து போகிறது. தொலைந்த பணத்தை சம்பாதித்து கொடுக்க ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி கேங்கில் இணைந்து வங்கி ஒன்றை கொள்ளையடிக்க முயல்கின்றனர். கொள்ளை அடித்தார்களா? தொலைத்த பணத்தை மீட்டார்களா? என காமெடியா சொல்கிறது படம்.
நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜேஷ்வரின் மகனான விக்ரம் ராஜேஷ்வர் தனது நண்பரான அருண் கேசவ் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் இது.
ஒவ்வொரு கேரக்டருக்கு ஒவ்வொரு விதமான மைனஸ் இருப்பது, வங்கியை கொள்ளை அடிக்க பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டுவது, வங்கி லாக்கரை எளிதாக திறப்பது என ஏராளமான டுவிஸ்டுகளுடன் கூடவே காதலையும் வைத்து சுவாரஸ்மான படத்தை தந்திருக்கிறார்கள்.
அதுல்யா ரவிக்கு வாய்ப்புகள் குறைவென்றாலும், முந்தைய படங்களை விட அழகாக இருக்கிறார். வைபவ் காமெடி கேங்ஸ்டர்களில் சிக்கி விழிபிதுங்குவது கலகலக்க வைக்கிறது.
இரண்டு மணி நேரம் கவலையை மறந்து சிரிக்க வைக்கிறார்கள் கேங்ஸ்டர்ஸ்.