ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நெல்சன் வெங்கடேசனின் அடுத்த வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது டிஎன்ஏ.
காதல் தோல்வியால் மது போதைக்கு அடிமையாகும் அதர்வா. ஒரு சிறிய மனோநோய் பிரச்னையால் திருமணமாகாமல் இருக்கும் நிமிஷா சஜயனை திருமணம் செய்கிறார். மகிழ்ச்சியாக வாழும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. மயக்க நிலையிலிருந்து கண் விழித்து குழந்தையை வாங்கும் திவ்யா, அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என்கிறார். நிஜமாகவே பிறந்த குழந்தை மாற்றப்பட்டதா, அல்லது கடத்தப்பட்டதா, கடத்தியது யார்? எதற்காக என்பதுதான் படத்தின் கதை.
அதர்வா எமோஷன், ஆக்ஷன் இரண்டிலுமே கலக்கி இருக்கிறார். மனைவி மீது பாசம், குழந்தை மீது ஏக்கம் என கலங்கடிக்கிறார். குழந்தை பிறந்த பிறகு வெளிப்படும் ஒரு தாயின் உணர்ச்சி வெள்ளம், குழந்தையைக் காணவில்லை என்கிற ஏக்கம், வேறொருவரின் பிள்ளை என்றாலும் அதை தாயுள்ளத்தோடு பார்க்கும் மனம் என நடிப்பு அரக்கியாகவே இருக்கிறர் நிமிஷா சஜயன்.
எஸ்.ஐ.யாக வரும் பாலாஜி சக்திவேல், கடத்தல் பாட்டியாக வரும் சாத்தூர் விஜயலட்சுமி, ரமேஷ் திலக், சேத்தன், விஜி ஆகியோரின் நடிப்பும் நிறைவு.
ஜிப்ரானின் பின்னணி இசை, பதற வைக்கிறது என்றால், பார்த்திபனின் ஒளிப்பதிவு கதையை இயக்குனருடன் சேர்ந்து சொல்கிறது. ஐந்து இசையமைப்பாளர்களின் பாடல்களும் கதையை நகர்த்த உதவுகிறது. நெல்சன் வெங்கடேசனின் திரைக்கதை, படத்தோடு கட்டிப்போடுகிறது.
படம் ஆரம்பிக்கும் ‘பார்’ பாடல், இரண்டாம் பாதியில் ஒரு ‘கிளாமர்’ பாடல் என இவை இரண்டும் இளைஞர்களுக்கானது. டிஎன்ஏ பரிசோதனை ரிசல்ட் ‘பாசிட்டிவ்’.