கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படம். படத்தின் கதை என்னவென்றால்… பொள்ளாச்சி அருகில் உள்ள மலைகிராமமான சேத்துமடையில் தன் அப்பா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சண்முக பாண்டியன். அவர்கள் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்கிறது மணியன் என்ற யானை.
அதே ஊரில் கந்து வட்டி தொழில் செய்யும் வில்லனிடம் கடன் வாங்கி தவிக்கிறது சண்முக பாண்டியன் குடும்பம். யானை மணியன் மதிப்பு மிக்க பொக்கிஷயம் என்பதை அறியும் கும்பல் ஒன்று வட்டித் தொழில் வில்லன் மூலம் அதனை வடநாட்டுக்கு கடத்துகிறது. தனக்கு பிரியமான மணியனை சண்முக பாண்டியன் எப்படி மீட்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.
எம்ஜிஆருக்கு ‘நல்ல நேரம்’, கமல்ஹாசனுக்கு ‘ராம் லட்சுமணன்’, ரஜினிக்கு ‘அன்னை ஓர் ஆலயம்’ போன்று சண்முக பாண்டியனுக்கு இது யானை செண்டிமெனட் கதை. 6 அடிக்கும் கூடுதலான உயரம், ஆஜாகுபானுவான தோற்றம், நீண்ட தலைமுடி என படம் முழுக்க மிரட்டுகிறார் சண்முக பாண்டியன். யானையை நினைத்து உருகுவதும், தகப்பனுக்கு ஒன்று என்றால் பொங்குவது என்று அப்பா விஜயகாந்தின் கோபத்தை அப்படியே வெளிப்படுத்துகிறார். அவரது தந்தையாக வரும் கஸ்தூரிராஜாவும் சிறப்பாக நடித்துள்ளார்.
காகா கோபால், முனீஷ்காந்த், அருள்தாஸ், ரிஷி ரித்விக், கருடா ராம் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அடர்ந்த காடுகள், மலைகள், யானைகள் என கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது.
‘சக உயிரான விலங்குகளையும் நேசியுங்கள், நரபலி உள்ளிட்ட கொடூரமான மூட நம்பிக்கைகளை விட்டு விலகுங்கள்’ என்கிற மெசேஜை பரபர ஆக்ஷன் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யு.அன்பு. படத்தில் வரும் விஜயகாந்தின் ஏஜ தொழில்நுட்ப காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.
விஜயகாந்த் ரசிகர்களுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து மகன் பரிமாறியிருக்கும் ஆக்ஷன் விருந்து.