தயாரிப்பாளர் அம்பேத்குமாரின் சினிமா காதல் அசாத்தியமானது: அதர்வா புகழாரம்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் ‘டி என் ஏ’ . அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற 20ம் தேதி படம் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் அதர்வா பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் வெளியான சிறந்த படங்களில் ‘பரியேறும் பெருமாள்’ ஒன்று.‌ இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு ஏதேனும் கதை இருந்தால். அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் .
‘டி என் ஏ’ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் போனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன், அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.‌

கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் ‘டி என் ஏ’ என்றார்.‌ உடனே ‘டி என் ஏ’ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் ‘டி என் ஏ’ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார். திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம்.‌ அந்த காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும். 15 வினாடிகளில் அந்த காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது.‌

அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும்.
இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம்.‌ சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது அசாத்தியமானது.
கதையை அனைவரும் எளிதாக எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது.

இந்த படம் ஒரு நல்ல படம். உங்களுடைய திரை உலக பயணத்தில் சிறந்த படமாக இது இருக்கும் என்று என்னிடம் சொன்னார். இந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்கு பயம் இல்லை. பதட்டமும் இல்லை.சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது . நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.‌ நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை. ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை. இந்த படத்தை பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.‌ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.