பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர். வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
இதை முன்னிட்டு படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசியதாவது: 8 வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை மனோஜ் பெனோ அவர்களிடம் கூறினேன்; எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட என்மீது நம்பிக்கை வைத்து பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல் சார்பில் இப்படத்தை தயாரித்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
படத்தின் கதை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யாவை தேர்ந்தெடுத்தோம். அதே போல இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள், அவர் இந்த படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மேலும் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது. என்றார்.
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ பேசும்பொழுது,” பல்துறை வித்தகராக விளங்கும் பாபி பாலச்சந்திரன் அடுத்ததாக திரைப்படத் தயாரிப்பிலும் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டதே பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்.
ஏற்கனவே உள்ள துறைகளில் வெற்றி கண்டதைப் போலவே இந்த துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அதற்கு அவர் அமைத்த குழுவே எங்களுடைய பிடிஜி படத் தயாரிப்புக் குழு. அவரைப் போன்ற பெருமைக்குரிய நபருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பதே எங்களுடைய கடமை மற்றும் பொறுப்பு.
மேலும் அவருக்கு சினிமா துறையில் அதீத ஈடுபாடு உண்டு. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது. திறமையான நடிப்பை வெளிப்படுத்திய வைபவ் மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்த அதுல்யா மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் ‘எக்ஸ்டெர்ரோ’ குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.