பி.எம்.பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிக்கும் படம் குயிலி. அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி உள்ளார். நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார்.
ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விழாவில் தயாரிப்பாளர் அருண் குமார் பேசியதாவது: ‘இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது. இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம். என்றார்.
இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. ” என்றார்.