‘அக்யூஸ்ட்’ படம் 25 ஆண்டு தவம்: உதயா நெகிழ்ச்சி

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் விமிசீ ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் உதயா பேசியதாவது: எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.