நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், சாம் சி.எஸ்.பின்னணி இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசியதாவது: இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள்.
அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன்.
மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி. என்றார்.