திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் சுப்பிரமணியபுரம், இந்த கிராமத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் யோக்கே புரத்தில் வாழ்கிறார்கள், இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் சுல்தான் பேட்டையில் வாழ்கிறார்கள். இப்படி மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து கிடக்கிறார்கள் மக்கள். இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இந்து இளைஞரான விமலும், கிறிஸ்தவ பெண்ணான சாயாதேவியும் காதலிக்கிறார்கள். காதலுக்கு இரண்டு ஊர்களுமே எதிர்ப்பு. காதலர்கள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். கொன்றவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் கதை. அதோடு இந்து கிராமத்தில் புதிதாக திருமணம் செய்கிற தம்பதிகள் மர்மமாக கொல்லப்படுகிறார்கள். இதை செய்வது யார் என்பது படத்தின் இன்னொரு பகுதி.
விமல் ஹீரோயிசம் காட்டாமல் கதையின் நாயகனாக அளவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவி அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கிட்டத்தட்ட படத்தின் கதை போக்கிற்கு காரணமானவராக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் நிறைவாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் தவிர கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
மலைகிராமத்தையும், கிராமத்து மக்களையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் செழியன்.தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறது.
மதமாற்றத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் பேசியிருக்கிறது படம். சொந்தபந்தமாக இருந்தாலும் மதம் என்று வரும்போது மனிதர்களுக்கு மதம் பிடித்து விடுகிறது என்பதை காட்சிகளாலும், உணர்ச்சி மிகு வசனங்களாலும் சொல்லி இருக்கிறார். ஆனாலும் இந்து மதத்தை மட்டும் உயர்த்தி பிடித்திருப்பது நடுநிலையாக இல்லை. அதை சரி செய்திருந்தால் முக்கியமான படமாகி இருக்கும்.