நடுத்தர குடும்ப வாழ்க்கையில் எந்தவித சுவாரஸ்யமும், சாகசங்களும் இருக்காது, என்று நினைத்துக் கொண்டிருக்கும் கதையாசிரியர் ஒருவர், அப்படிப்பட்ட நடுத்தர குடும்ப வாழ்க்கை பற்றி கதை எழுத முடிவு செய்கிறார். அதற்காக நடுத்தர குடும்ப மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை சேகரிக்க தொடங்குகிறார்.
அப்போது, அவருக்கு ஒரு உண்மை புரிகிறது. தன்னால் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாது என்று தெரிந்தும், தனது குடும்பத்தின் வாரிசுகளை தலைநிமிர செய்வதற்காக வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய சாகசம் நிறைந்தது என்பதை, காளி வெங்கட்டின் சாதாரன வாழ்க்கை மூலம் புரிந்து கொள்வதுதான் படத்தின் கதை.
காளி வெங்கட்டின் கதை என்னவென்றால்… அவர் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர். தனது சுமைகளையும், கவலைகளையும் மறைத்து தன் மகள், மகன் எதிர்காலத்திற்காக உழைக்கிறார். ஆனால் இதை உணராத வாரிசுகள் அவரை கண்டு கொள்வதில்லை. ஒரு வயதிற்கு பிறகு அவரை புறக்கணிக்கவும் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை புரிந்து கொள்கிறபோது என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பு மூலம் ஆட்டோ டிரைவராகவே மனதில் உட்கார்ந்து கொள்கிறார். கதையாசிரியர் ஜோதி ராமையாவாக சத்யராஜ் முழு கதையையும் உணர்வோடு சொல்கிறார். காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி, மகனாக நடித்திருக்கும் ஹரிப்பிரியன், நிறைவாக செய்திருக்கிறார்கள். காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், கவனிக்க வைக்கிறார்.
கீதா கைலாசம் அரசியல்வாதியாக கலகலப்பூட்டுகிறார். எளிமையான மக்களின் எதார்த்த வாழ்க்கையையும், அவர்களது வாழ்விடங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே.
கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நிறைவை தருகிறது. எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர்களது எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.