அரசு மருத்துவமனையில் ஆண் நர்சாக வேலை பார்க்கிறார் கதையின் நாயகனான விஜித். இயக்குனர் தங்கர் பச்சானின் மகன். அந்த ஆஸ்பத்திரியில் அடிக்கடி குழந்தை காணாமல் போகிறது. இது மருத்துவ அமைச்சரான மைம் கோபியின் சொந்தத் தொகுதியிலேயே நடப்பதால், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் உத்தரவிடுகிறார்.
அந்த குழந்தையை கடத்துவது விஜித் என்று தெரிய வர அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். விஜின் ஏன் குழந்தைகளை கடத்துகிறார். கடத்தி என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.
ஒரு பக்கா க்ரைம் திரில்லர் பாணியில் ஜாதி வெறிக்கு எதிரான, புதிய ஒரு அதிர்ச்சிகரமான தீர்வோடு படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் சிவபிரகாசம். இதுவரை யாரும் யோசித்து பார்க்காத கோணத்தில் ஜாதி பிரச்சினையை அணுகி அதிர்ச்சி தருகிறார் இயக்குனர்.
விஜித் நடிப்பில் முதல் படத்திலேயே முதிர்ச்சி. 3 கால கட்ட கதை, மூன்று தோற்றம் என ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காட்சியிலும், பழிவாங்க தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனத்திலும் கவனம் ஈர்க்கிறார். நாயகி ஷாலி நிறைவான நடிப்பை தந்திருக்கிறார், காதலி, மனைவி, அதன்பிறகு இன்னொரு முகமென அவரும் நிறைய உழைத்திருக்கிறார், மைம் கோபி அருள்தாஸ், சுபத்ரா ராபர்ட் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்திற்கு என்ன தேவையோ அதனை ஒளிப்பதிவாளர் கொடுத்திருக்கிறார். இளையராஜா பின்னணி இசையில் தனது இருப்பை தெரிவிக்கிறார், ஆனால் பாடல்களில் ஏமாற்றுகிறார்.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் ஜாதி வெறிக்கு எதிராக கொடியை உயர்த்திப் பிடிக்கிறது படம்.
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சானுக்கும் சினிமா சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறது படம். வெல்கம் டூ தமிழ் சினிமா விஜித்.