பழைய டெல்லி தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) குரூப்பின் மீது எதிர்பாரதவிதமாக போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத குமரவேல் சுடப்பட்டு சாகிறார். அவரது மகனான சிம்புவும், மகளான ஐஸ்வர்ய லட்சுமியும் திசைக்கு ஒருவராக வீசி எறியப்படுகிறார்கள். சிம்புவை கமல் தத்தெடுத்து வளர்க்கிறார்.
சிம்பு வளர்ந்து ஆளான பிறகு ஒரு வழக்கிற்காக சிறை செல்லும் கமல் தலைமை பொறுப்பை சிம்புவிடம் விட்டுச் செல்கிறார். இதனால் பொறாமை கொள்ளும் நாசர், சிம்புவை கொம்பு சீவி விடுகிறார். அப்போது ஓர் உண்மை, சிம்புவுக்குத் தெரிய வர, கமலை கொல்ல சதிதிட்டம் போடுகிறார். இதிலிருந்து தப்பிக்கும் கமல், சிம்புவையும் அவருடன் இருப்பவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறார். இந்த மோதலில் என்ன நடக்கிறது, என்பது கதை.
36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்திருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறது. முதல் பகுதியில் பிளாஷ் பேக்கும், பிற்பகுதியில் ஆக்ஷன் காட்சிகளையும் நிரப்பி மாஸ் எண்டர்டெயின்மென்ட் படம் தந்திருக்கிறார் மணிரத்னம்.
வழக்கமான தாதா படமாக இல்லாமல், மணிரத்னம், கமல் படமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறது படம். மணி, கமல் கூட்டணி படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளம் கமல்ஹாசனை காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.
ரங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் கமல் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வயதுக்கு மீறிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அமரன் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக சிம்பு தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்காக உருகுவது, இரண்டாம் பாகத்தில் கொல்லத் துடிப்பது என அவரின் நடிப்பை ரசிக்கலாம். கொடுத்த வேலையை த்ரிஷா செய்திருக்கிறார்.
கமலின் மனைவியாக அபிராமி, அண்ணனாக நாசர், மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி, பகவதி, ஜோஜூ ஜார்ஜ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிட்டான, ‘முத்தமழைஞ்’ , ‘விண்வெளி நாயகா’ பாடல்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றமே. பின்னணி இசை, காட்சிகளுக்கு உணர்வூட்டுகிறது. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவில் ஜெய்சல்மாரில் நடக்கும் கார் சேஸிங், நேபாளத்தின் பனிமலை உள்பட பல காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் கமல்&மணிரத்னம் காமினேஷனில் இன்னொரு ‘நாயகன்’.