சூர்யா, கார்த்தியை பார்ப்பது போன்று நான் தம்பியை கவனிப்பேன்: விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பிறகு பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா இன்று நேற்று நாளை உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

இந்த நிலையில் அவரது தம்பி ருத்ராவும் நடிகராக தன் பயணத்தை துவங்குகிறார்.ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் தற்போது ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார்.இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார். அவரும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார். ஜென்மாரட்டின் இசையமைத்துள்ளார். ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக தன்னுடைய அறிமுகம் பற்றி அவர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “கேமராவுக்கு பின்னாலும் முன்னாலும் பணிபுரிவது சவாலானது. ஆனால், நல்லபடியாக பணி செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது”. என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டதாவது, ” இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்து உடனே ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.