இந்த படத்தின் கதை 1990களில் நடக்கிறது. ஊருக்கே தலைவராகவும், நல்ல மதிப்புடையவராகவும் இருக்கிறார் பிரபு. தனது மகன் வெற்றியை அதீத பாசத்துடன் வளர்க்கிறார். விவசாயம் பொய்த்து சொத்துக்கள் கரைந்து விட்டதால் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்க்கும் சட்டவிரோத செயலை செய்யும் கும்பலுடன் சேர்கிறார். அதாவது ஹவாலா மோசடி. அங்கு நடக்கும் ஒரு பிரச்னையால் வெற்றியின் வாழ்க்கையில் பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. அதை அவர் சமாளித்தாரா, அப்பா – மகன் பாசம் என்னவானது என்பதைச் சொல்கிறது படம்.
அறிமுக இயக்குநர் மகா கந்தன் முதல் படத்திலேயே தன்னை தரமான இயக்குனராக முன்நிறுத்துகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அழுத்தமான கதைகளில் நடித்து வந்த வெற்றி முதன் முறையாக ஆக்ஷன் கதை களத்திற்கு வந்திருக்கிறார். அப்பா – மகன் பாசம், காதலியுடனான ரொமான்ஸ் டிராக் என இரண்டு எமோஷனல் ஏரியாக்களிலும் பாசாகிறார்.
தந்தையாக பிரபு, கணீர் குரல், அதிரடி சண்டை என ஸ்கோர் செய்கிறார். நாயகியாக கிருஷ்ண பிரியா, காதல் காட்சிகளில் மின்னுகிறார்.
தங்கதுரை, இமான் அண்ணாச்சி இருவரும் சிரிக்க வைக்கிறார்கள். வில்லனாக கோமல் குமார், லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான் அனுபவ நடிப்பை தந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி வெயில் பூமியை அதற்கேற்ற தாக்கத்துடன் திரையில் காட்டுகிறார். நௌஃபல் ராஜா இசையில் ‘ஆகாசத்த தொட்டாச்சி’ பாடல் காதில் ரீங்காரமிடுகிறது.
அப்பா – மகன் பாசக்கதையை ஜனரஞ்சக சினிமாவாக தந்திருக்கிறார்கள். கள்ளுக்கடை கவர்ச்சிப் பாடல், காதல் காட்சிகள், காமெடிகள் எனச் சுவாரஸ்யமான படமாக உருவாகி இருக்கிறது.