கிராமத்தை சேர்ந்த ஆதிரன் சுரேஷ், தனது நண்பர் ராகுலுடன் சென்னையில் மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர் அமைக்க வேண்டும் என்பது அவர் கனவு. இதற்காக அவர் பல வழிகளில் கஷ்டப்பட்டு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். அந்த பணம் திருட்டுப்போய்விடுகிறது. இதனால் ஊருக்கு சென்று பணம் புரட்டி வரலாம் என்று நண்பர்களுடன் பைக்கில் கிளம்புகிறார்.
செல்லும் வழியில் ஒரு இடத்தில் பைக் பஞ்சராகிவிட சாலைக்கு சற்று தொலைவில் தனியாக இருக்கும் ஒரு மெக்கானிக் ஷெட்டில் பஞ்சர் சரிசெய்ய செல்கிறார்கள். ஆனால் அந்த மெக்கானிக் ஷெட் பல மர்மங்களை உள்ளடக்கியது. அங்கு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
திக் திக் என நகரும், முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தர்மா. ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஆகியோர் கதைக்கு தேவையான மீட்டரில் நடித்து படத்திற்கு வலு சேர்க்கிறார்கள். வில்லன்களாக வின்சென்ட்.எஸ், மைக்கேல்.எஸ், சதீஷ் ராமதாஸ் மற்றும் பஞ்சர் சிறுவன் தஷ்ணா, ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பெண் கேரக்டர்களே இல்லாத படமாகவும், அந்த குறை தெரியாத படமாகவும் அமைந்திருக்கிறது. சாந்தன் அன்பழகனின் பின்னணி இசை, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுவதோடு திகிலூட்டவும் செய்கிறது. ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா கதைக்கு தேவையான அளவிற்கு மிகை இல்லாத ஒளிப்பதிவை தந்திருக்கிறார்.
உலகில் நடப்பது எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. அதாவது விதியின் படியே நடக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக இதுவரை இல்லாத புதுவிதமாக படம் உருவாகி உள்ளது. திகில் பிரியர்களுக்கு நல்லதொரு விருந்து.