ஆடு திருடி பிழைப்பு நடத்தும் அநாதை சேது. ஒரு முறை ஆடு திருடும்போது கிராம மக்கள் துரத்த ஓடி வரும் அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். அது நாயகி சம்ரிதி தாராவின் வீட்டு கிணறு. சேதுவை காப்பாற்றும் சம்ரிதி அவர் மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். ஊருக்கு சென்று வீட்டை விற்று அந்த பணத்துடன் வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறிச் செல்கிறார் சேது.
இந்த நிலையில் சேது ஆடு திருடிய அந்த இரவில் ஊர் பண்ணையார் பி.எல்.தேனப்பன் ஒருவனை கொலை செய்கிறார். அந்த கொலையை ஆடு திருடிய சேது மீது சுமத்தி தப்பிக்க போலீஸ் அதிகாரி ஆர்.பி.பாலாவுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். சேது செய்யாத கொலைக்கு சிறை சென்றாரா? காதலியை மணந்தாரா என்பதுதான் படத்தின் கதை.
ஆடு திருடும் சிறிய குற்றவாளிகளை கொலை குற்றவாளிகளாக்கி அவர்களை வாழ்க்கையை நாசம் செய்யும் அதிகார, பண வர்க்கம் பற்றி ஒரு காதலின் வழியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏபிஜி.ஏழுமலை. கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.
‘மைனா’ படத்தில் மிரட்டலான போலீசாக நடித்த சேது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். காதலில் கசிந்துருகுவதும், திருடனாக பயந்து பமம்முவதுமான இரு வித நடிப்பையும் தெளிவாக தந்திருக்கிறா£ர். நாயகி சம்ரிதிதாரா அழகாக இருக்கிறார். இறுதியில் சோகத்தையும் தந்து விடுகிறார்.
90களில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்த சவுந்தர்யனின் மகன் அமர் கீத் இசை அமைத்துள்ளார். இசையில் அப்பாவின் வாசனை, மற்றும் அவரது பாடல்களையும் பயன்படுத்தியுள்ளார். பால பழனியப்பனின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மையல்: பெயருக்கேற்ற வகையில் அழகான காதல் கதை.