சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய்சேதுபதி தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா செல்கிறார். அங்கு தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டு திரியும் யோகிபாபுவின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஓட்டலில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்.
எதிர்வீட்டுப் பெண்ணான ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) விஜய் சேதுபதிக்கும் காதல் மலர்கிறது. ருக்குவை கொடுமைபடுத்துகிறார், அவரது வளர்ப்பு தந்தையும், போலீஸ் அதிகாரியுமான பப்லு பிருத்விராஜ். அவரிடமிருந்து ருக்குவை விடுவிக்க சில கோடி பணம் தேவைப்படுகிறது. இதனால் விஜய்சேதுபதி செய்யும் சில காரியங்கள், அவருக்கு சிக்கலாகிறது. ஒரு புறம் தாதாக்களும், மறுபுறம் போலீசும் துரத்துகிறது. இந்த இரண்டையும் சமாளித்து ருக்குவை அவர் எப்படி கரம் பிடிக்கிறார் என்பது மீதி கதை.
‘மஹாராஜா’ என்ற அழுத்தமான படம் கொடுத்த விஜய்சேதுபதியை ஆக்ஷன் ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுகக்குமார் . விஜய், அஜீத் நடிக்க வேண்டிய கதையில் தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் கலக்குகிறார் விஜய்சேதுபதி. அலட்டிக் கொள்ளாமல் வில்லன்களுடன் மோதுவது, விதவிதமாக ஐடியா போடுவது, அதைச் செயல்படுத்துவது என அவர் பாணியில் நடித்திருக்கிறார்.
இளமை துள்ளல், குடும்ப பிரச்சினைகள் இரண்டையும் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ருக்மணி வசந்த். யோகி பாபு படத்தின் இன்னொரு ஹீரோ. நீண்ட காலத்திற்கு பிறகு அவரது காமெடி ரசிக்க வைக்கிறது.
கெட்ட போலீஸாக வரும் பப்லு பிருத்விராஜ், வில்லனாக வரும் அவினாஸ், திவ்யா பிள்ளை உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்குகிறது. கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அள்ளி வந்திருக்கிறது.
ஏஸ் சீட்டுக்கட்டு ராஜா மட்டுமல்ல, ஆக்ஷன், கலெக்ஷன் ராஜாவும்தான்.