துணிச்சலான கிராமத்துப் பெண் வேம்பு (ஷீலா ராஜ்குமார்). அவரது தந்தை அவரை அப்படித்தான் வளர்க்கிறார். அவளது வீரத்தை வளர்க்க சிலம்பம் கற்க வைக்கிறார். படிப்பிலும், சிலம்பத்திலும் சிறப்பாக வளர்கிறாள் வேம்பு. கூடவே அத்தை மகன் சூர்யாவை(ஹரி கிருஷ்ணன்) காதலிக்கிறாள். அதுவே அவளுக்கு பிரச்சினையாக மாறுகிறது.
‘பெண்ணுக்கு எதுக்கு சிலம்பம்’ என்றும், ‘அத்தை மகனாக இருந்தாலும் இப்படியா ஊர் சுற்றுவது’ என்று சமூகம் கேலி பேசுகிறது. இதனால் இருவருக்கும் அவசர அவசரமாக திருமணம் நடக்கிறது. திருமணமான சில நாட்களில் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து வேம்பு மீண்டு, போராடி எப்படி லட்சியத்தில் வெல்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.
பெண் விடுதலையை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு கிராமத்து பெண்ணின் குறைந்தபட்ச லட்சியம், அதற்காக அவள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என யதார்த்தமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு. படத்தில் வரும் ஒரு திருடனைத் தவிர மற்ற அனைவரையுமே நேர்மையான கதாபாத்திரங்களாக காட்டி இருப்பது சிறப்பு.
ஷீலா எப்போதும்போல அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார். பள்ளி மாணவியாகவும், பக்குவமான மனைவியாகவும் இரு பரிமாணங்களையும் அதற்குள்ள தன்மையோடு அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது கள்ளங்கபடமில்லாத சிரிப்பும், எப்போதும் மெலிதாக இடையோடும் சோகமும் அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இவரை ஏன் தமிழ் சினிமா இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.
சுறுசுறுப்பான கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்துகிறார், ஹரி கிருஷ்ணன். பிற்பகுதி கதையில் அதற்கு நேர் எதிர்மறையான குணசித்திரத்தை அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களைப்போலவே படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் உணர்ந்து, உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
கருவேலங்காட்டைக்கூட பசுமையான பூமியாக காட்டுகிறது ஏ.குமரனின் கேமரா. மணிகண்டன் முரளியின் இசையில் இளையராஜாவின் சாயல்.
கிராமங்களில் இன்னமும் மாறாத பிற்போக்குத்தனங்களையும், அதை மாற்றும் வழியையும் அழகாக பேசியிருக்கிறாள் வேம்பு.