நரிவேட்டை

ஒன்றிய, மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்குமோ, தணிக்கை குழு தடைபோடுமோ என்ற பயத்திலேயே பல உண்மைகள் சினிமாவாக்கப்படுவதில்லை. அப்படியே ஒரு கதை வந்தாலும் அரசின் மனம் நோகாமல் எடுக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளர்களுக்கு இருக்கிறது.

படைப்பாளிகளின் பயத்தை குறைசொல்ல முடியாது காரணம்… சினிமா என்பது ஒரு புத்தகம் போன்று அல்ல… எல்லாவற்றையும் தீயிட்டு கொழுத்தினாலும் சில ஆயிரங்கள்தான் நஷ்டம். ஆனால் ஒரு சினிமா கோடிகளை விழுங்கி தயாராவது.

ஆனால் அதையும் மீதி அத்திபூத்த மாதிரி சில படங்கள் மக்களை வந்து சேர்ந்து விடுவதுண்டு. அப்படியான ஒரு படம்தான் ‘நரிவேட்டை’.
வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் சாயல் இதில் இருந்தாலும், இரண்டும் வெவ்வேறான கதை. விடுதலை படத்திலாவது வெற்றிமாறன் போலீஸ் தரப்பு நியாயத்தையும் சொல்லியிருப்பார்.

ஆனால் இந்த படம் ‘போலீஸ்’ என்கிற பெயரில் ஆளும் அதிகார வர்க்கம் வைத்திருக்கும் இரக்கமற்ற கூலிப்படைகளின் செயல்பாட்டை எந்த சமரசமும் இன்றி பேசுகிறது.
விடுதலை போன்று இதிலும் கதையின் நாயகன் டொவினோ தாமஸ், குடும்ப சூழ்நிலை காரணமாக போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு சேர்கிறார். மலைவாழ் மக்கள் ஓரிடத்தில் கூடி தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், குடியிருக்க வீட்டுக்காகவும் அகிம்சை வழியில் போராடுகிறார்கள்.

காடுகளை மெல்ல மெல்ல தின்று துப்பி வரும் அதிகார வர்கத்திற்கு இந்த போராட்டம் பிடிக்கவில்லை. அமைதி பேச்சு வார்த்தை என்று சொல்லிக்கொண்டே அப்பாவி மக்கள் மீது மறைமுக தாக்குதலை நடத்துகிறது. மவோயிஸ்டுகள் பின்னால் இருக்கிறார்கள், தீவிரவாதிகள் முன்னால் இருக்கிறார்கள் என்று கதை கட்டுகிறது. இதை உள்ளுக்குள் இருந்து கவனிக்கும் டொவினோ தாமசால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. முடிந்த மட்டும் எதிர்த்து போராடுகிறார்.

இறுதியில் போராட்டத்தை தடுக்க, போராடும் மக்களை விரட்ட அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்க்க போலீசுக்கு மேலிட உத்தரவு வருகிறது. இதற்காக தனது போலீஸ் அதிகாரி ஒருவரையே காட்டுக்குள் கொன்று விட்டு அந்த பழியை போராடும் மக்கள் மீது போட்டு துப்பாக்கி கொண்டு வெறியாட்டம் ஆடுகிறது போலீஸ்.

இதில் ஒரு சிறுமி உள்பட 6 பேர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே இறந்ததாக கணக்குகாட்டி விட்டு மீதி 5 பேரையும் எரித்துக் கொன்று புதைக்கிறது போலீஸ். இதற்கு நேரடிய சாட்சியாக இருக்கும் டொவினோ தாமஸ் புதைக்கப்பட்ட உண்மைகளை எப்படி வெளியில் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

உண்மை சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு கற்பனையாக சொல்லப்பட்ட கதைதான். ஆனால் இதனை தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நக்சல் வேட்டை என மலைவாழ் மக்கள் வேட்டை. வாச்சாத்தி கொடூரம், மெரீனா ஜல்லிக்கட்டு வெறியாட்டம் என அனைத்தும் கண்முன் வந்து போகிறது.

டொவினோ தாமஸ் நடிப்பால் தனது கேரக்டரை மெருகூட்டி இருக்கிறார். நம்ம இயக்குனர் சேரன் கொடூர போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், சுராஜ் வெஞ்சரமுடு நேர்மையான போலீசாக நடித்துள்ளார். அருண் மனோகரன் இயக்கி உள்ளார்.

ஒரு சினிமாவாக பார்க்கும்போது சில குறைகள் இருந்தாலும், அது பேசிய விஷயம் பெருசு. எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
ராயல் சல்யூட் ஆல் சேட்டன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.