பெண்களுக்கு தற்காப்பு கலை முக்கியம்: யோகிடா விழாவில், சாய் தன்ஷிகா பேச்சு

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ படங்கள் , ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரில் நடித்தவர் சாய் தன்ஷிகா. தற்போது அவர் நடித்துள்ள படம் ‘யோகிடா’. சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி உள்ளார் கௌதம் கிருஷ்ணா. மலையாள இசை அமைப்பாளர் தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.

இங்கு சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே யோகிடா.
எத்தனை மனிதர்கள் எதிர்த்தாலும் உண்மை உண்மைதான் – எத்தனை மனிதர்கள் ஆதரித்தாலும் தவறு தவறுதான் என்ற உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் தன்ஷிகா. இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகி சாய்தன்ஷிகா பேசும்போது,”17- வருடங்களாக மூத்த பத்திரிக்கையாளர்களுடன் பயணித்துக் கொண்டே, தமிழ்த்திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்த திரைத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’ வரைக்கும் வந்துள்ளேன். அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்புக்கலை போய்சேர வேண்டும். என்றார்

விஷால் பேசியதாவது:’யோகிடா’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் .கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இயக்குனர் கௌதம் கிருஷ்ணா அவர்கள் திரைத்துறையில் மேன்மேலும் சாதிக்க வேண்டும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.