7சிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுக குமார், தயாரித்து இயக்கி உள்ள படம் ஏஸ். விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள்.
வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்டு விஜய்சேதுபதி பேசியதாவது:
நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி.
இசையமைப்பாளர் ஜஸ்டின், எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதாவது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார்.
ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷீட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கிரண் நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார். யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் .
எதுவுமே இல்லாத ஒரு மனிதன் எல்லாமுமாக மாறுவதுதான் ஏஸ் படத்தின் ஒன் லைன். ஒரு மனிதனில் எல்லா காலையும் ஒரே மாதிரி விடியாது. அந்த வகையில் படத்தின் நாயகனின் ஒரு நாள் விடியல் அவன் வாழ்நாளை புரட்டிப்போடுகிறது. எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படம்.