மாமன்: தாய்மாமன் மகிமை

திருச்சியில் இணிப்பு, பலகார தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. அவருக்கு துணையாக இருக்கிறார் அக்கா கணவர் பாபா பாஸ்கர். தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர். சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், கருவுறும் சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன் மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி.
காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை திருமணம் செய்த பிறகு பிரகீத் சிவனால் பிரச்சினை உருவாகிறது. அதுவே குடும்ப சண்டையாக மாறி கணவனை பிரிகிறார் ஐஸ்வர்யா. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம், உறவு சிக்கல்களை வைத்து ஒரு படம் தந்திருக்கிறார், பிரசாந்த் பாண்டிராஜ், குடும்பத்தார் மீது அக்கறை, அக்கா மகன் மீது அதீத பாசம், மனைவி மீதான காதல் எனக் குடும்பங்களின் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார், சூரி. ஆக்ஷனிலும் அளவாக நடித்திருக்கிறார்.

காதல், கோபம், என பொறுப்பை உணர்ந்து, நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஐஸ்வரியா லெட்சுமி. உணர்வுகளோடும் உணர்ச்சிகளோடும் விளையாடுகிறார் சுவாசிகா. சிறுவன் பிரகீத் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். ராஜ் கிரண், விஜி சந்திரசேகர் தம்பதிகள் அழவைத்து விடுகிறார்கள்.

எதார்த்தமான ஒளியமைப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். ஷாம் அப்துல் வஹாப் இசையில் படத்தின் கதை வலுவாக சொல்லப்படுகிறது.
குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிறுசிறு முரண்பாடுகள், உறவுச் சிக்கல்கள், தனிமனித சுதந்திரம் எனப் பல எமோஷனல் புள்ளிகளைக் கையிலெடுத்து அழகான குடும்ப படத்தை தந்திருக்கிறார் இந்த மாமன்.

Leave A Reply

Your email address will not be published.