சந்தானம் ஒரு பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ஒரு ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க செல்வராகனால் அழைக்கப்படுகிறார். இதற்காக, சந்தானம், அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குக்கு குடும்பமாகச் செல்கின்றனர்.
படம் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான், அந்த திரையரங்கமும் அதில் ஓடும் திரைப்படமும் தங்களை சிக்க வைக்கப் போடப்பட்ட ஒரு பிளான் என்று தெரியவருகிறது. விமர்சனம் என்ற பெயரில், திரைப்படங்களைத் கிழித்துத் தொங்கவிட்டு, அவை தோல்வியடையக் காரணமாக இருக்கும் சந்தானத்தையும், அவரது குடும்பத்தினரையும் சினிமாவில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் துரத்த, அவர்களிடமிருந்து காதலி மற்றும் குடும்பத்தினரை சந்தானம் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
சினிமாவிற்குள் ஒரு சினிமா, அதற்குள் நுழையும் கேரக்டர்கள், என்கிற கான்செப்டை வைத்து, கலகலப்பான காமெடி படம் தந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த். தீபக் குமார் பாண்டேவின் ஒளிப்பதிவு அதற்கும் நிறைய உதவி இருக்கிறது. கதையை ஒதுக்குப்புறமான திரையரங்கிலிருந்து வெளியே கொண்டு சென்று சொகுசுக் கப்பல், அங்கிருந்து தீவு என படத்தை பிரமாண்டமாக்கி இருக்கிறார்கள்.
சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் காமெடி அலை பலமாக வீசுகிறது. ராகவனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனனை கலாய்த்து தொங்க விட்டிருக்கிறார்கள். நாயகி கீதிகாவுக்கு பேய் தோற்றம் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது. குறிப்பாக, ஹிட்ச்ஹாக் இருதயராஜாவாக வரும் செல்வராகவன், யூடியூப் விமர்சகர்களைப் புரட்டியெடுத்திருப்பது, படைப்பாளிகளின் வலியைச் சொல்லும் நிஜமான படைப்பு.
ரசிகர்கள் ரசிக்கவும், விமர்சகர்கள் சிந்திக்கவுமான படைப்பு.