தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான், படம் வெற்றி பெறும்: ‘லெவன்’ இயக்குனர் பேச்சு

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மே 16 முதல் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசியதாவது: இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன்.‌ அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.‌

நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை.‌ ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.