ஹாலிவுட் பாணியில் பேண்டசி புதையல் படமாக உருவாகி இருக்கிறது ‘கஜானா’. பிரமாண்ட காட்சிகள், விஎப்எக்ஸ் கிராபிக்ஸ் என மிரட்டலாக தயாராகி உள்ளது. வருகிற 9ம் தேதி படம் வெளியாகிறது. டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ளது. அதோடு சாந்தினி மற்றும் வேதிகா ஆகியோர் கவர்ச்சி விருந்தும் படைக்கிறார்கள்.
இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை இப்படக்குழு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக யோகி பாபு, நாயகிகளாக வேதிகா, சாந்தினி, மற்றும் இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்கள்.
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கி உள்ளார்.