நாங்கள்: தந்தைகளின் சைக்காலஜி

ஊட்டி மலை கிராமத்தில் வசிக்கும் அப்துல் ரஃபே, அங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது மகன்கள் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோரை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு மகன்களும் பயந்து நடுங்குகின்றனர். இதையடுத்து அம்மாவிடம் சென்ற அவர்கள், வேறு பள்ளியில் படிக்க பண உதவி கேட்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பண உதவி செய்ய முடியாத நிலையில் அம்மா தவிக்க, மீண்டும் அப்பாவிடம் வரும் 3 மகன்களும் மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வருகிறார், பிரார்த்தனா அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

தனது சொந்த கதையையே படமாக தயாரித்து, இயக்கி இருக்கிறார் அவினாஷ் பிரகாஷ். பாசம் என்ற பெயரில் தந்தைகள் செய்யும் அட்ராசிட்டிதான் படத்தின் திரைக்கதை. ஒவ்வொரு வீட்டில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது படம். தந்தை மற்றும் மகன்கள் பார்வையில் திரைக்கதையை அமைத்து எளிமையாக கதை சொல்லி இருக்கிறார்கள்.
தந்தையாக நடித்த அப்துல் ரஃபே, சிக்கலான தனது கேரக்டரை நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவரது மனைவியாக பிரார்த்தனா நிறைவாக செய்திருக்கிறார். மகன்களாக வரும் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோர், அந்தந்த கேரக்டராகவே மாறி சிறப்பாக நடித்துள்ளனர்.

வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம். இன்றைக்கு தேவையான ஒரு விஷயத்தை பேசிய விதத்தில் கவனம் பெறுகிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.