உலகமே அஞ்சு நடுங்கும் அண்டர் கிரவுண்டு தாதாவான ஏகே என்கிற ரெட் டிராகன் மனைவி திரிஷா , தனது குழந்தை மீது அதீத பாசம் கொண்ட ஏகே திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார். இதனால் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு சிறைக்குச் செல்லும் ஏகே, 18 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி ஆவலோடு தன் மகனை பார்க்க வருகிறார். ஆனால், அவருடைய மகன் செய்யாத ஒரு குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறார். மகனைக் காப்பாற்ற மீண்டும் களம் இறங்குகிறார் ஏற்றி அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் குடும்ப சென்டிமென்டை இணைத்து கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
புது படத்தையும் அஜித் பிராண்ட் படமாக சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் . படம் தொய்வில்லாமல் வேகமாக நகர்வதில் திரைக்கதையாக்கமும் இயக்குநருக்கு கை கொடுக்கிறது. மும்பையில் தாதாவாக இருந்திருந்தாலும் உலகில் உள்ள கேங்ஸ்டர்கள் எல்லாம் அஜித்தைப் பார்த்தாலே நடுங்கும் அளவுக்கு நாயகப் பிம்பத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.
அஜித்தின் பழைய ஹிட் படங்களிலிருந்து ஏகப்பட்ட மான்டேஜ் ரெஃபரன்ஸ்களை இயக்குநர் இறைத்துவிட்டிருக்கிறார். அது படத்திற்கு பெரிய பணமாக அமைந்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. த்ரிஷா, சிம்ரன் வரை இந்த ரெஃபரன்ஸ்கள் இன்னும் சுவாரஸ்யமானது . அஜித் படப் பாடல் உட்பட வெவ்வேறு படங்களின் ஹிட் பாடல்களையும் இந்தப் படத்துக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறார்கள்.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை அஜித் ராஜ்ஜியம்தான். அவருடைய இளமைத் தோற்றக் காட்சிகளைவிட வயதான காட்சிகளில் இறங்கி விளையாடியிருக்கிறார். மகனுக்காக உருகுவது, எதிரிகளைப் பந்தாடுவது என நடிப்பிலும் மெனக்கெட்டிருக்கிறார். அஜித்தின் மனைவியாக த்ரிஷா நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். வில்லனாக அர்ஜுன் தாஸ் இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். பிரபு, சிம்ரன், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அஜித்தின் மகனாக கார்த்திகேய தேவ் என எல்லோருமே கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ்குமார் பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் . அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் ஸ்பெயின் இன்னும் அழகாக தெரிகிறது . ‘குட் பேட் அக்லி’ ஏகே ரசிகர்களுக்கு டபுள் ஓகே.