ஈ 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பேரன்பும் பெருங்கோபமும். இளையராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை தங்கர் பச்சான் வெளியிடுகிறார். கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றிய சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,
விழாவில் நாயகன் விஜித் பேசியதாவது: இந்த படத்தில் ஒரு பங்காக இருப்பதை நானும் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் நான் என்ன அனுபவித்தேனோ, படம் பார்க்கும்போது நீங்களும் அதை அனுபவிப்பீர்கள். துரோகம், வலி, வெறுப்பு, ஏமாற்றம் எதையும் பார்க்காமல் வளர்ந்த பையன் நான். ஆனால் இந்த படம் எனக்கு அதை எல்லாம் கற்றுக் கொடுத்தது. தனிமைக்கும் சத்தம் இருக்கிறது என்பதை இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் எனக்கு கற்றுக் கொடுத்தது.
நான் தனிமையாக இருக்கும் போது இந்த ஜீவா கதாபாத்திரம் என் கூடவே இருந்தது. நடிப்புக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை இந்த கதாபாத்திரம் என் மீது ஏறும்போது பார்த்தேன். நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா சார் இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார். என்று கூறினார்.
நாயகி ஷாலி பேசியதாவது: இந்தக் கதை குறித்து இயக்குநர் சிவப்பிரகாஷ் என்னிடம் சொன்ன அந்த காட்சி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்து பார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ்.. என் அம்மா சொன்னதை வைத்து எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள்.
என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும். சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன்.. கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன்.. அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன். என்றார்.
இயக்குநர் தங்கர்பச்சான் பேசியதாவது: இந்த திரைப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்து இருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது.
ஒரு போராளி என்பவன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சொல்லை, சிந்தனையை வைத்திருந்தால் போதும். கையில் சரியான கலையை வைத்திருக்கும் இயக்குநர் தான் போராளி. படம் இயல்பாக இருந்தாலும் வசனங்கள் மனோகரா, பராசக்தி படங்களின் வருவது போன்று தான் இந்த படத்தில் உரையாடல்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு முருகேஷ் பாபு வசனத்தை அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்.
படத்தின் கதாபாத்திரங்களான சாராவும் ஜீவாவும் உங்களை தூங்கவே விட மாட்டார்கள். மைம் கோபி என்ன மாதிரி நடிகர்.. இந்தியாவிலேயே தமிழில் தான் மிகச்சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள்.. தயாரிப்பாளர் ஜெய் கிருஷ்ணன் இன்றைக்கு இருக்கும் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர். அந்த வேலையை அமைதியாக செய்து வருகிறார். இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன்.
இந்த படத்தை முழுமையாக புரிந்து வைத்து எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார். இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார். என்றார்.