பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு – க. பி’ (கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின்).
காதலிக்கும்போது இனிக்கும் விஷயங்கள் கல்யாணத்திற்கு பிறகு கசப்பது ஏன்? பிரச்சினைகள் எங்கே உருவாகிறது? அதற்கான தீர்வு என்ன? என்பதை நேர்த்தியாகவும், அழகாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் நாயகன் விக்னேஷ் ரவிக்கு சினிமா இயக்குனராக வேண்டும் என்பது கனவு. இதற்காக போராடுகிறார். இதற்காக காதல் மனைவி சரண்யாவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார், இவர் சம்பாதிக்க, அவர் வாய்ப்பு தேடுகிறார். 3 வருடங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு மோதல் ஏற்படுகிறது.
இன்னொரு ஜோடியான டிஎஸ்கே, பிரியதர்ஷினி தீவிரமாக காதலிக்கிறார்கள். இவரும் சினிமா வாய்ப்பு தேடுகிறவர்தான். பிரியதர்ஷினி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஒரு வேலைக்கு போனால்தானே நானும் என் பெற்றோரிடம் பேச முடியும் என அவர் சொல்ல இதுவே பிரேக் அப்பிற்கு காரணமாகிறது.
இப்படி பெண்களை புரிந்து கொள்ள முடியாத காதல் வாழ்க்கையும், கல்யாண வாழ்க்கையும் கசப்பாகிறது. இந்த கசப்பு எப்படி இணிப்பாகிறது என்பது மீதி கதை.
டாணாக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி இதில் சாதிக்க துடிக்கும், இயக்குனராகவும், திருமண உறவு சிக்கலை புரிந்து கொள்ள முடியாதவராகவும் கச்சிதமாக நடித்துள்ளார். சரண்யா ரவிச்சந்திரன் எப்போதும்போல யதார்த்தமாக நடித்திருக்கிறார். லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த டிஎஸ்கேவும், சின்னத்திரை புகழ் பிரியதர்ஷினியும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஜி எம் சுந்தரின் ஒளிப்பதிவு குளோஸ்அப் ஷாட்களிலேயே கதை சொல்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பணியாற்றிய தர்ஷன் ரவிக்குமார் இசையும் படத்திற்கு இசைந்திருக்கிறது.
இன்றைக்கு தேவையான உறவு சிக்கலின் உளவியலை பேசிய விதத்தில் முக்கியமான படமாகிறது.