தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒய் நாட் சஷிகாந்த். இயக்குனராகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் பல வருடங்களுக்கு பிறகு தனது இயக்குனர் கனவை நிறைவேற்றியிருப்பதோடு, தரமான இயக்குனர் என்ற முத்திரையையும் பதித்திருக்கிறார். முதல் படத்திலேயே கனமான, சிக்கலான ஒரு கருவை துணிச்சலுடன் கையாண்டதற்கே பாராட்டை தெரிவித்து விடலாம்.
தண்ணீரில் வாகனங்களை இயக்கும் புதிய கான்செப்ட் ஒன்றை கண்டுபிடிக்கிறார் மாதவன். ஆனால் அவரை மூலிகை பெட்ரோல் ராமரோடு ஒப்பிட்டு துரத்தி அடித்து கோடிகளை கொட்டு உன் கண்டுபிடிப்பை ஏற்கிறோம் என்கிறது அதிகார மையம்.
சமீபத்திய சொதப்பலான விளையாட்டால் அணியிலிருந்து துரத்தப்படும் நிலையில் இருக்கிறார் கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் சித்தார்த். கடைசியாக நடக்கும் ஒரு டெஸ்ட் மேட்சில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு.
இப்படியான நிலையில் சித்தார்த்தின் மகனை பிணை கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு அவரை மேட்ச்பிக்சிங் கும்பலோடு இணைத்து அதன் மூலம் தனது கண்டுபிடிப்பை நிரூபிக்கும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார் மாதவன். இதன் முடிவு என்ன என்பது கதை.
நான்கு முக்கிய கேரக்டர்கள், ஒரு கிரிக்கெட் மைதானம், இவற்றை வைத்துக் கொண்டு பரபரவென ஒரு படம் தந்திருக்கிறார் சஷிகாந்த். ஏமாற்றத்தையே சந்தித்து சோர்ந்து போன ஒரு மனிதனை கண்முன் நிறுத்துகிறார் மாதவன், எப்படியாவது வெற்றி பெறத் துடிக்கும் அதே வேளையில் குடும்பத்தையும் அதற்குள் கொண்டு வந்து தவிக்கும் ஒரு கிரிக்கெட்டராக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். இவர்கள் இருவருக்கும் இடையில் தவிக்கும் பெண்களாக நயன்தாரா, மீரா ஜாஸ்மின்.
மீரா ஜாஸ்மினுக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் நயன்தாரா கனமான கதாபாத்திரத்தை எளிதாக கையாள்கிறார். கணவனை தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிப்பதும், ஒரு குழந்தைக்கு ஏங்குவதுமாக கலங்க வைக்கிறார்.
முதல் படத்திலேயே பின்னணி இசையிலும், பாடலிலும் கவனிக்க வைத்திருக்கிறார் சக்திஸ்ரீ கோபாலன். விஜய் சிங் கோகிலின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
கிரிக்கெட் மைதான காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை, நயன்தாரா எடுக்கும் அந்த திடீர் முடிவும் ஏற்க முடியவில்லை. என்றாலும் கிரிக்கெட் வீரர்கள், மற்றும் இளம் விஞ்ஞானிகள் வாழ்க்கையில் அரசியலும், அதிகாரமும் எந்த அளவிற்கு ஊடுறுவி விளையாடுகிறது என்பதை சொன்ன விதத்தில் டெஸ்ட் பர்ஸ்ட் கிளாசில் பாசாகிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.