தரைப்படை: ஆக்ஷன் அதிரடி

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடும் நிறுவனங்கள் பற்றி அடிக்கடி செய்தி தாளில் பார்க்கிறோம். அப்படி ஒரு சம்பவத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதுதான் தரைப்படையின் கதை.

பொதுமக்களிடம் அதிகவட்டி ஆசை காட்டி ஆயிரம் கோடியை ஆட்டையை போடும் போலி நிறுவனம் ஒன்று அந்த பணத்தை தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த கும்பலின் தலைவரை கொலை செய்துவிட்டு அந்த தங்கத்தையும், வைரங்களையும் பிரஜன் கொள்ளையடிக்கிறார்.
அவரிடம் இருந்து அதை கொள்ளையடிக்க விஜய் விஷ்வா முயற்சிக்கிறார். மறுபக்கம், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடும் ஜீவாவும், தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மூன்று பேருக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் படத்தின் திரைக்கதை.

பிரஜின் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்து படம் முழுக்க சிகரெட் புகைத்துக் கொண்டே வலம் வருகிறார். மும்பையில் இருந்து வந்து தனது குடும்பத்தை தேடும் லொள்ளு சபா ஜீவா, ரஜினி பாணியில் அடியாட்களுடன் வலம் வருகிறார். கண்ணில் படுபவர்களை சுட்டு கொன்று விட்டு பணப்பெட்டியை தன் காதலியோடு தேடுகிறார் விஜய் விஸ்வா. இப்படி மூன்று பேருமே தங்கள் ஸ்டைலில் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.

படம் முழுக்கவே சேசிங் காட்சிகள், சண்டை காட்சிகள் நிரம்பி உள்ளது. ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் கதைக்கேற்ற ஒளிப்பதிவை தந்ததிருக்கிறார். இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

தங்கம் மற்றும் வைரங்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கைமாறுவது , கடைசியில் அது யார் கைக்கு செல்கிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். சண்டை காட்சிகளை குறைத்து கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் முக்கியமானதொரு ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.