இன்றைய நவீன உலகில் அதிகம் புழங்கும் வார்த்தை, ணிவிமி (மாத்தவணை) . சோப்பு, சீப்பு முதல் சொந்த வீடு வரைக்கும் இந்த தவணை முறை வந்து விட்டது. ஒரு முறை கடன் கொடுத்து விட்டு காலம் முழுவதும் கடனாயாக்கி சந்தோஷத்தை, நிம்மதியை பிடுங்கி கொள்வதே இதன் நோக்கம்.
இந்த புதிய வியாபாரத்தால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை வெகு யதார்த்தமாக சொல்லி உள்ள படம். அனுபவித்து ரசித்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்யகுனர் சதாசிவம் சின்னராஜ். அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.
மாம்பழ ஜூஸ் பேக்டரியில் வேலை செய்யும் கதை நாயகன் சதாசிவம் சின்ன ராஜ், தன் காதலியை இம்பரஸ் செய்வதற்காக முதலில் 2 லட்சத்திற்கு பைக் வாங்குகிறார். கல்யாணத்தின் போது கார் வாங்குகிறார். எல்லாமே மாதத் தவணையில்தான். திடீரென வேலை பறிபோக மாதத்தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார். கடன் கொடுத்தவர்கள் அடியாட்களை ஏறி அவருக்கு சொந்தமான அத்தனையையும் பறிக்க நினைக்கிறார்கள். பொருட்கள் போவதோடு மானம், மரியாதை எல்லாம் போகிறது. இதனை நாயகனும், நாயகியும் எப்படி மீட்டு இதிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
கடன் வாங்கியவர்கள் மட்டுமல்ல கியாரண்டி கையெழுத்து போட்டவர்களையும் இது எப்படி பாதிக்கிறது என்பதை சொன்ன விதத்தில் படம் கவனம் பெறுகிறது.
சதாசிவம் சின்னராஜ் புதுமுகம் என்பது தெரியாத அளவிற்கு இயல்பாக நடித்திருக்கிறார். சாய் தான்யா காதலியாகவும், மனைவியாகவும் இரு முகம் காட்டியிருக்கிறார். நண்பர்களாக வரும் பிளாக் பாண்டி, ஆதவன் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பேரரசு நாயகியின் தந்தையாக பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். தாயாக நடித்திருக்கும் செந்தி குமாரியும் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார். ஸ்ரீநாத் பிச்சையின் இசையும், பிரான்ஸின் ஒளிப்பதிவும் படத்திற்கு உதவி இருக்கிறது.
நவீன கடன் கம்பெனிகள் அப்பாவி மக்களை எப்படி தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள். பின்னர் எப்படி அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் இது படமல்ல, பாடம்.