வீர தீர சூரன்: ஆக்ஷன் விருந்து

ரவி (பிருத்விராஜ்) – கண்ணன் (சுராஜ் வெஞ்சரமுடு). இருவரும் ஊரையே நடுங்க வைக்கும் தாதாக்கள். ஒரு பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு இருவரையும் என் கவுண்டரில் போட்டுத்தள்ளுவதெற்கென்றே வருகிறார் எஸ்.பி அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா). ஒரு தாயும், மகளும் காணாமல் போகும் விஷயத்தில் இரண்டு தாதாக்களும் மாட்டிக் கொள்ள அதையே காரணமாக வைத்து எண்கவுண்டருக்கு தயாராகிறார் அருணகிரி.

தாங்கள் கொல்லப்படுவோம் என்பதை உணரும் தாதாக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் வேலை பார்த்து தற்போது ஒதுங்கி மளிகை கடை வைத்திருக்கும் காளியிடம் (விக்ரம்) போய் உதவி கேட்கிறார். தன் குடும்பத்தின் நிலையை எண்ணி எவ்வளவோ மறுக்கும் காளி, ஒருகட்டத்தில் ரவி தன் காலில் விழுந்ததும் மனம் இறங்கி ஒப்புக் கொள்கிறார். இதன் பிறகு அந்த இரவு முழுக்க என்ன நடந்தது என்பதே ‘வீர தீர சூரன்: பாகம் 2’

ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் முதல் காட்சியில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. படத்தின் இடைவேளை வரை அதே டெம்போவில் எங்கும் குறையாமல் பார்த்துக் கொண்டது எஸ்.யு.அருண்குமாரின் திரைக்கதை சாதுர்யம். ஆக்ஷன் காட்சிகளை விட வெறும் வசனங்கள் மூலமாகவே ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வருகிறார் இயக்குனர்.

விக்ரம் மீண்டும் தனது ரசிகர்களுக்கு படைத்திருக்கும் ஆக்ஷன் விருந்துதான் படம். மாஸ் காட்சிகளை மிக அநாயசமாக கையாள்கிறார். படம் முழுக்க தனது இருப்பை மிக அழுத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்து ஈர்க்கிறார்.

எஸ்.பி ஆக வரும் எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல நடிப்பில் பின்னியிருக்கிறார். சின்ன சின்ன மேனரிசங்களில் கூட நுணுக்கம் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார். மலையாள நடிகர் சுராஜுக்கு அவரது வழக்கமான பாணியை தாண்டி ஆக்ரோஷமான கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கின்றன. படத்தில் பல சிங்கிள் ஷாட் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா எதற்காக ரவி, கண்ணன் மீது பகையுடன் இருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் வரும் திலீப்புக்கும் விக்ரமுக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பதற்கான பதில் முதல் பாகத்தில் கிடைக்கும் என்று நம்பலாம்.
தரமான ஆக்‌ஷன் த்ரில்லரை விரும்புவோருக்கும், விக்ரமின் ரசிகர்களுக்கும் காரசாரமான ஒரு ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறார் இந்த ‘வீர தீர சூரன்.
===============

Leave A Reply

Your email address will not be published.