‘வீர தீர சூரன்’ எனது ரசிகர்களுக்கான படம்: விக்ரம்

ஹெச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘வீர தீர சூரன்: பார்ட் 2′ . விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 27ம் தேதி வெளிவருகிறது.

இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்வு ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடந்தது.விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், ” எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். இந்த ஆடியோ விழாவில் தான் ஜீ.வி. சாரை நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்களுடைய இசையில் வெளியான’ கோல்டன் ஸ்பேரோ..’ என்னுடைய ஃபேவரைட் சார். தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி.

அவர் உண்மையான மனிதன். தங்கமான மனிதன். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தில் பணியாற்றிய போது ‘சித்தா’ படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.

விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார்..! என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான்.
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான ‘நியூ ‘படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்திருப்பார். அதுவும் எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படம் ஒரு தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மூவி தான். சாதாரண படம் அல்ல . ஃபர்ஸ்ட் சீனிலிருந்து இல்ல.. ஃபர்ஸ்ட் ஷாட்ல இருந்தே கதை ஆரம்பிச்சுடும். அதனால இந்த படம் பார்க்கும்போது அஞ்சு நிமிஷம் முன்னாடியே தியேட்டருக்கு வந்துடுங்க. டோன்ட் மிஸ் பர்ஸ்ட் ஷாட்” என்றார்.

விழாவில் விக்ரம் பேசியதாவது: நான் படத்தைப் பற்றி பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது. பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.’சித்தா’ என்றொரு படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமார் என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும்.. அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீரதீர சூரன்.

என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் . ஆனால் ஒரு எமோஷனலான படம்.
‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும்… அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரி படம்தான் வீரதீர சூரன். ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்.இந்தப் படத்திற்கான பயணத்தின் போது என்னுடன் அருண் இருந்தார் என்பது மிகப்பெரிய பலமாக இருந்தது.‌ இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருந்தது. அருண் குமார் என்னுடைய வாழ்க்கையில் ஒரு நண்பராகிவிட்டார்.

இந்தப் படத்தை நாங்கள் எந்த அளவிற்கு நேசித்து உருவாக்கினோமோ.. அதே அளவிற்கு தயாரிப்பாளர் ரியா ஷிபுவும் நேசத்துடன் ஆதரவளித்தார். அற்புதமான தயாரிப்பாளர். அவருடைய எனர்ஜி ஸ்பெஷல் ஆனது. எதிர்காலத்தில் அவருடைய தந்தையை விட மிகப்பெரிய தயாரிப்பாளராக திகழ்வார்.

எனக்கு எப்போதும் ஜீ.வி. பிரகாஷ் குமார் லக்கி. என்னுடன் இணைந்து பணியாற்றிய படங்களில் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட். எல்லா இன்டர்வியூவிலும் அவருடைய இசை இன்னொரு கதாநாயகன் என்று சொல்லி இருக்கிறேன். அவர் என்னுடன் இணைந்து பணியாற்றிய எல்லா படத்தின் கதையும் வித்தியாசமானதாக இருந்தது. அவற்றில் எல்லாவற்றிலும் இசையும் முக்கியமானதாக இருந்தது. இதற்காக ஜீவி பிரகாஷ் குமாருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் என் அன்பான ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. இது உண்மை நான். ஒவ்வொரு விசயத்தை செய்யும் போது உங்களை நினைத்து தான் செய்கிறேன். என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.