கொடைக்கானல் பகுதியில் இளைஞர்கள் தங்கள் வயிற்றை கொடூரமாக கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கிறார்கள். இந்த தற்கொலை சம்பவத்தை விசாரணை செய்கிறார், போலீஸ் அதிகாரி ஷாம். ஒரு கட்டத்தில் அவருக்கு உதவும் ஒரு கான்ஸ்டபிளே அப்படியான தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஏன் இப்படி நடக்கிறது, இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை
கிரைம் திரில்லர், ஹாரர், அமானுஷயங்கள் கலந்து ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறார் அரவிந்த் ராஜகோபால். ஜப்பான் நாட்டில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு கதையை தமிழ் பின்னணயில் நேர்த்தியாக கலந்து திரைக்கதை எழுதி பரபரப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஷாமிற்கு போலீஸ் வேடம் புதியதல்ல… இந்த படத்தில் கொஞ்சம் ஸ்பெஷல். ரொம்பவே அமைதியாக அதே நேரத்தில் கேரக்டரை உள்வாங்கி நேர்த்தியாக நடித்திருக்கிறார். கூடவே கடமையை செய்ய முடியாத தடுமாற்றம், ஏமாற்றத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஷாமின் மனைவியாக வரும் நிரா நின்று நிதானமாக நடித்திருக்கிறார். இளம் போலீஸ் அதிகாரியாக வரும் சுமந்த் அவருடைய மனைவியாக வரும் வெண்பா ஆகியோர் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். விதேஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நிழல்கள் ரவி, ஜீவா ரவி. அருள் டி. சங்கர், ஜே.ஆர்.மார்ட்டின், அருள் ஜோதி, அரவிந்த் ராஜகோபால் என ஒவ்வொரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கல்யாண் வெங்கட்ராமன் கேமரா வும், சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக சொல்ல வேண்டிய கதையை எளிய பட்ஜெட்டில் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.