தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சஷிகாந்த். காதலில் சொதப்புவது எப்படி?, காவியதலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தற்போது ‘ டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்ரல் 4ம் வெளியாகிறது.
படம் குறித்து சஷிகாந்த் கூறியதாவது: நான் கட்டிட கலை நிபுணர். எனக்கு சினிமாவுல கதை சொல்லணும்னு ஆசை உண்டு. எல்லாத்தையும் முறையா கத்துக்கணும் இல்லையா? அதனால தயாரிப்பாளரா உள்ள வந்தேன். அதாவது டைரக்டர் ஆகணுங்கறதுக்காகத்தான், தயாரிப்பாளர் ஆனேன். ஒவ்வொரு படம் முடிச்சதும் அடுத்து படம் இயக்கலாம்னு நினைப்பேன். ஆனா, அது தள்ளி போயிட்டே இருந்தது. இதுக்கு இடையில 12 வருஷத்துக்கு முன்னாலயே ‘டெஸ்ட்’ கதையை எழுதிவிட்டேன் அதை இப்போதுதான் படமாக்கும் நேரம் அமைந்தது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ‘டெஸ்டிங்’ நேரம் வரும். இந்தப் படத்துல ஒரு மூணு கேரக்டருக்கும் அப்படியொரு இக்கட்டான நேரம் வருது. அந்த ‘டெஸ்டை’ அவங்க எப்படி எதிர்கொள்றாங்க அப்படிங்கறது கதை. இதுல டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய விஷயங்களும் வரும்.
இந்தப் படத்துக்குள்ள முதல்ல வந்தது சித்தார்த். இந்த கதையை எழுதும்போதே அர்ஜுன்ங்கற கேரக்டர்ல அவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்படித்தான் அவர் முதல்ல வந்தார். பிறகு ஒரு பெண் கேரக்டரை எழுதும்போது நயன்தாரா பெயரை போட்டுதான் எழுத ஆரம்பிச்சேன். அவங்களை எனக்குத் தெரியும் அப்படிங்கறதால, இந்த கதையில வர்ற குமுதா கேரக்டர் பற்றி ஃபோன்ல சொன்னேன். அவங்களோட நிஜ கேரக்டருக்கும் இந்தப் படத்தோட கேரக்டருக்கும் சில விஷயங்கள் ஒத்துபோனதால, நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.
அப்புறம் மாதவன்,இந்த ஸ்கிரிப்டை இன்னும் சிறப்பா மாத்தறதுக்கு என்னைத் தூண்டிக்கிட்டே இருந்தார். இந்தப் படத்துல பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் ஓடிடி ரிலீஸ் ஏன் என்று பலரும் கேட்கிறார்கள்.
ஒரு அறிமுக இயக்குநரோட படம், பல்வேறு நாடுகள்ல ஏராளமான பார்வையாளர்களை வச்சிருக்கிற நெட்பிளிக்ஸ் தளத்துல வெளியாறதை எனக்கு கிடைச்ச பெரிய வாய்ப்பா பார்க்கிறேன். இந்தப் படம் ஒரே நாள்ல உலகம் முழுவதுமான பார்வையாளர்களுக்கு போய் சேரணும்னு நினைச்சேன். அதுக்கு நெட்ப்ளிக்ஸ் ரிலீஸ், சரியாக இருக்கும்னு தோணுனதால அதுல பண்றோம். என்றார்.