சுனில், வைபவ் ஆகிய இருவரும் ஊர் மக்களின் அன்பையும், மரியாதையும் பெற்ற ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் தந்தை திடீரென இறந்து போகிறார். ஆனால் அவருக்கு இறுதி சடங்கு செய்வதில் ஒரு பெரும் சிக்கல். அவரது ஆண்குறி இயல்பு நிலையில் இல்லை. மிகவும் துக்கமான நாள் அதிர்ச்சி நிறைந்த நாளாக மாற, இதைப் பெரிய அவமானமாக நினைத்து ஊர் மக்களிடமிருந்து இதை மறைக்க நினைக்கின்றனர்.
இந்தக் குழப்பத்துக்கு இடையே இறுதிச் சடங்கை எப்படி முடிக்கின்றனர், அந்த இறுதிச் சடங்கின்போது வெளிவரும் உண்மைகள் என்னென்ன என்பதே படத்தின் கதை.
அண்ணன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்கிறார் சுனில். குறிப்பாகத் தந்தையிடம் இறுதிவரை பேசாமலே இருந்துவிட்டதை எண்ணி குற்றவுணர்வு கொள்ளும் இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் . அவருக்குத் தம்பியாக வரும் வைபவ், காமெடி குடிகாரனாக கலகலப்பூட்டுகிறார். பாலசரவணன், முனீஷ்காந்த் காமெடி கூட்டணி கிச்சு கிச்சு மூட்டுகிறது.
நிஹாரிகா , சாந்தினி இயல்பாக நடித்திருக்கிறார்கள். இறுதிக் காட்சியில் தனம், சுபத்ரா ஆகிய இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பது கலகலப்பு. இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒரு சிறிய வீடு, அதற்குள் நிறைய கதாபாத்திரங்கள் எனச் சிறிய இடத்தில், சிறப்பான ஒளியுணர்வைக் கொடுத்துக் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். அருண்ராஜின் பின்னணி இசை நகைச்சுவை உணர்வுக்கு உதவியிருக்கிறது.
அடல்ட்கண்டென்ட் படமாக இருந்தாலும் ஆபாசம் இன்றி அழகாக சிரிக்க வைக்கிறது பெருசு.