பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் மாடசாமி கோவில் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் கோகுல் கவுதம். அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது அவர் மீது கொலைப்பழி விழுகிறது. சிறைக்கு செல்லும் நாயகன் தான் நினைத்தது போல் சுடலை மாடன் கொடை விழாவை நடத்தினாரா ?, நாயகன் மீது விழுந்த கொலைப்பழியின் பின்னணி என்ன ? ஆகிய கேள்விகளுக்கான விடையை சொல்கிறது படம்.
சிறுதெய்வ வழிபாட்டு முறையையும், அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் வைத்துக்கொண்டு பரபரப்பான கிரைம் திரில்லர் படமாக வந்திருக்கிறது.
நாயகன் கோகுல் கவுதம், மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார். சுடலை மாடன் சாமியாக அதிரடி ஆட்டம் போடுகிறார், நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களது அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் சூர்ய நாராயணன் ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
விபின். ஆர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு இசைவாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சின்ராஜ் ராம், கதாபாத்திரங்களின் வாழ்வியல் பகுதிகளை யதார்த்தமாக காட்சிகளாக்கி இருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தரமான படத்தை தந்தை கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் இரா.தங்கபாண்டி.
இன்னும் கூடுதலான பட்ஜெட்டில், கூடுதல் கவனத்துடன் எடுத்திருந்தால் ‘காந்தாரா’ ஆகியிருக்கும்.